இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட நாவலடி வட்டையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் முஸ்லிம் விவசாயிகள் 21 பேருக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்களுக்குரிய காணிகளுக்குள் வெளியாட்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட காணிகளுக்குள் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், காணி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் முன்மொழிவுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்ரம அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் பங்குபற்றுதலுடன், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான், தமன பிரதேச செயலாளர் திருமதி. ஏ.எம்.ஏ. குமாரி, அம்பாறை மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் பணிப்பாளர், அரச உயர் அதிகாரிகள் மற்றும் நாவலடி வட்டை விவசாயிகள், தமன பிரதேச விவசாயிகள் கலந்து கொண்ட விஷேட கூட்டம் இன்று 28/10/2025 ம் திகதி இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நீண்ட நேர கலந்துரையாடலின் பின் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1. நாவலடி வட்டையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட 21 முஸ்லிம் விவசாயிகளிக்கு 02 ஏக்கர் வீதம் காணிகளை அடையாளப்படுத்தல்.
2. 36 தமன பிரதேச விவசாயிகளின் காணிகளை அடையாளப்படுத்தல்
3. அம்பாறை மாவட்ட காணி ஆணையாளரினால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட 26 முஸ்லிம் விவசாயிகளுக்கான காணிகளை அடையாளப்படுத்தல்
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இறக்காமம், தமன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான எல்லைப் பிரச்சினைகள் நீண்டகாலமாக அடையாளப்படுத்தப்படாமல் உள்ளதால் இறக்காமம் - தமன பிரதேச செயலகங்களின் எல்லைகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
(கே. எ. ஹமீட் )

0 Comments